ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே….
மிக அரிதாக திரைப்பாடல் கேட்கும் நான், சமீபத்தில் ரசித்த ஒரு பாடலின் வரி வடிவம் இங்கே தந்திருக்கிறேன். இதை வரிவடிவத்தில் கோர்ப்பதற்காக அந்த பாடலை ஒரு 4 – 5 முறை கேட்டிருப்பேன். ஒரு நல்ல பாடலை நாமே முணுமுணுப்பதும் சந்தோஷமான விஷயம் தான் என்று உணர்ந்தேன்.
ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே,
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே,
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே,
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
லட்சியம் நிச்சயம் வெல்லும், ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ, அது பனியோ? நீ மோதிவிடு!
உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை? என்ற எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்?
காலப் போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்!
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்? கண்ணில் என்ன நீரோட்டம்?
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ, அது பனியோ? நீ மோதிவிடு!
ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே,
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம், வானம் அளவு யோசிப்போம்,
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்!
லட்சம் கனவு கண்ணோடு, லட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை, உறுதியோடுப் போராடு!
மனிதா! உன் மனதைக் கீறி விதைப் போடு, மரமாகும்;
அவமானம் அடைந்தால் நீ, எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா? துக்கம் என்ன? என் தோழா!
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்!
மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ, அது பனியோ? நீ மோதிவிடு!
ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே,
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே,
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ, அது பனியோ? நீ மோதிவிடு!
- கவிஞர் பா.விஜய்
இந்த பாடல் பல தன்னம்பிக்கை நூல்கள் படிப்பதற்கு சமம்.
கருப்புசுவாமி
இது நல்ல பாடல்தான். நானும் விரும்பிக் கேட்பேன்.
உங்கள் பதிவில் பாடல் தெரியவில்லை.
பூக்கள்தான் தெரிகின்றன. செயலியில் மாற்றித்தான் பார்க்க முடிகிறது.
கவனியுங்கள்.
நட்புடன்
சந்திரவதனா
உங்களைப்போலவே… இந்தப் பாடல் என்னையும், பலரையும் கவர்ந்திருக்கிறது. தன்னம்பிக்கை பற்றி பேசும்போதெல்லாம், பலரும் இந்த பாடலை குறிப்பிடுகிறார்கள். எங்கள் மகள் எழில் அந்த பாடலின் அர்த்தம் முழுவதும் புரியாமலே – முழுவதும் பாடுவாள். கவிஞர் விஜய் அவருடைய ஒரு செவ்வியில் குறிப்பிட்டிருந்தார் – திருச்சியில் ஒரு பள்ளியில் தினமும் காலைவணக்கத்துடன் பாடப்படுகிறது என்று.
சந்திரவதனா குறிப்பிட்டது போல் ஒரே பூவாகத்தான் தெரிகிறது அந்த பாடல் இங்கே. நான் கூட நினைத்தேன், ஒவ்வொரு பூக்களும் சொல்வதை அந்த பூக்களிடமே எங்களை கேட்டுக்கொள்ள சொல்கின்றீர்களோ என்று.
(முன்னொருமுறை தினம் ஒரு கவிதை சொக்கன் புண்ணியத்தில் எழுத்தில் வாசித்திருக்கிறேன். அதை பதிவெடுத்து எழிலிடம் கொடுத்தேன்.)
உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி! கவிதை தெரியாத பிரச்சனைக்கு என்னை மன்னிக்கவும். நான் Mozilla FireFox browser உபயோகிக்கிறேன். எனக்கு இந்த பிரச்சனை வரவில்லை. MS Internet Explorer வழியாக சோதித்துப் பார்த்து தாங்கள் சொல்லும் பிரச்சனையை அறிந்தேன். இப்போது சரியாகி விட்டது.
பாடல் நன்றாகத்தான் உள்ளது. ஆனால், ஒருமை-பன்மை பிழையைத் தவிர்த்திருக்கலாம். ஒவ்வொரு பூக்களுமே-ன்னு எப்படி சொல்ல முடியுது?