ராயபுரம் கடற்கரை….

royapuram_beach

இயற்கை அன்னையே!
தாய் மடியென தஞ்சம் கொண்டோம்,
சேய் எங்களுக்கு தண்டனை ஏன்?
ராட்சச அலைகளின் கோரத்தாண்டவம்,
உயிர் பறித்த உன் ஒய்யார ஆட்டம்.

கனவுடன், கடல் சென்ற மீனவ ஆண்கள்,
அவர்களின் நினைவுடன் அந்த பெண்கள்,
இவர்களின் நம்பிக்கைப் பூக்களாய் குழந்தைகள்,
அத்தனைப் பேரும் உனக்கு தாம்பூலமா?
வாரி, சுருட்டி, முழுங்கி, பின் துப்பியதேன்?

நான் மிதிவண்டி பழகிய காசிமேட்டுப் பாதை,
கணக்கில்லா மீன்கள் குவியும் சந்தை,
கடல் காற்றுக்காக பயணம் செய்த எண்ணூர் சாலை,
அத்தனையும் துடைத்தெறிந்த நீ பாதகிதான்!
ஆமாம்.. ஆமாம்.. நீ பாதகிதான்! பாதகிதான்!

பொழுதுபோக்காய் மணல் பாதத்தில் புரண்டோம்,
பொருள் ஈட்ட உன் கடல் மடியில் துடுப்பிட்டோம்,
கவலைகள் மறக்க, அதன் கரையில் உறங்கினோம்….
ஆனால் விழிக்கவேயில்லை! துரோகி….! திருப்தியா உனக்கு?
நீ தின்னக்கிடைத்த தீவனமா, நாங்கள்?

உனது அழிவுப் போக்குக்கு அறிகுறி என்ன?
கண்டுபிடிக்க, கணக்கற்ற கருவிகள் பூமியில் உண்டாம்!
போருக்கு, கருவி வாங்கிக் குவிக்கும் நாங்கள்,
உனது சதி அறியும் கருவி கொள்ளவில்லை!
பாவமன்னிப்பாய், எங்களுக்கு புத்தி கொடு! புத்தி கொடு!

விரக்தி வடிந்து விடியல் நோக்கி,
அன்புடன்,
த.கருப்புசுவாமி.

மறுமொழி இடுக

  • RSS என் இணையத்தளத்தில்