நான் கடவுள் – தமிழ்த் திரை விமோசனம்
என் வலைத்தளத்தில் நான் இதுவரை திரைப்படங்களைப் பற்றி எழுதியதில்லை. அப்படி எழுதத் தூண்டும் அளவுக்கு எந்தப் படமும் என்னைப் பாதிக்கவில்லை. பொதுவாக சில திரைப்படங்கள் நம்மை மகிழ்வித்தாலும் நம்மைப் பாதிப்பதில்லை (வில்லு, குருவி போன்ற படங்கள் இதில் எந்த ரகத்திலும் சேருவதில்லை என்பது வேறு விஷயம்). திரைப்படம் என்பது ஒரு கதை நிகழும் சூழலை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் கலை. இது வரை நான் பார்த்த படங்களிலேயே நான் கடவுள் தான் அந்த இலக்கணத்தை மிகச்சிறப்பாக பின்பற்றியிருக்கிறது. பாலா தான் ஒரு மாபெரும் கலைஞன் என்பதை நிரூபித்துள்ளார். படத்தின் வெற்றியில் (ஓடினாலும் ஓடாவிட்டாலும்) முக்கிய பங்கு ஜெயமோகன் மற்றும் இளையராஜாவுக்கு இருக்கிறது.
இந்தப் படத்திற்கு ஜெயமோகனைத் தவிர வேறு யார் வசனம் எழுதினாலும் இத்தனை சிறப்பாக இருந்திருக்க முடியாது. இந்த தேர்வு பாலாவின் திறமை தான். ஆன்மீகம் ஜெயமோகனுக்கு கை வந்த கலை. பகடியிலேயும் மனுஷன் புகுந்து விளையாடுகிறார். இவர் கொஞ்ச கால்ம் முன்னாள் சிவாஜி-எம்.ஜி.ஆரை கிண்டல் செய்து எல்லோரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டாரே, நினைவிருக்கிறதா?. இந்த படத்திலும் சிவாஜி, எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினி வேடம் அணிந்த கதாபாத்திரங்களை மனுஷன் சும்மா கலாய்க்கிறார். காசியில் நடக்கும் நுட்பமான ஆன்மீகம் விரவிய காட்சிகளும் ஆர்யாவின் சொற்ப கூரிய வசனங்களிலும் ஜெயமோகன் கொடி உயரவே பறக்கிறது. உடனடியாக என் நினைவுக்கு வரும் சில வசனங்கள்…
ஆட்டுக்கறி பிரியாணி தின்னாலும் மலையாளத்தான் மூளையே மூளை தான் ( இந்த வசனம் – ஜெயமோகனின் கேரளப் பிண்ணனியை நினைவூட்டுகிறது)
நெருப்புக்கு ஏதுடா சுத்தம், அசுத்தம் (கோயில் அகல் விளக்கில் சுருட்டு பற்ற வைக்கும்போது, ருத்ரன் கேட்பது)
தம்பி கணேசா, இப்ப இருக்கும் நண்டு சுண்டு நடிகனுக்கெல்லாம் கொஞ்சமாவது உன் நடிப்பை சொல்லிக்கொடுத்துட்டு போயிருக்கக்கூடாதா? (என்று சிவாஜி வேடம் போட்டவனைப் பார்த்து எம்.ஜி.ஆர் வேடம் போட்டவன் கேட்பது)
வாழக்கூடாதவர்களுக்கு நான் தரும் தண்டனை – மரணம்
வாழவே முடியாதவர்களுக்கு நான் தரும் மரணம் – வரம்
(ருத்ரன் கோர்ட்டில் சொல்லும் வரிகள் – படத்தின் மூலக்கதையே இதுதான்)
திரைப்பட பிண்ணனி இசை என்றால் இளையராஜா தான் என்றென்றும் ராஜா என்பதை இந்தப் படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார். காசி மற்றும் ருத்ரன் காட்சிகளுக்கு ஒரு வித இசை சித்திரம்- பிச்சைக்காரர்களின் காட்சிகளுக்கு வேறொரு இசை சித்திரம் என்று வர்ண ஜாலம் காட்டும் இசை, இளையராஜாவுடையது. “பிச்சைப் பாத்திரம்”, “ஓம் சிவம்” பாடல்கள் காட்சிகளுக்கேற்ற படைப்புகள். “மாதா உன் கோயிலில்” என்ற அருமையான பாடல் படத்தில் இல்லை. இளையராஜா அவர்களே! ஆஸ்கார் விருதுகள் உங்கள் திறமையை அங்கீகரிக்க வேண்டாம். அவை Marketing Techniques தெரிந்து “வாங்க” வேண்டிய விஷயம் (A.R.Rehman இதையே சற்று நாசூக்காக கூறியுள்ளார்.)
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்; நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்?
போன்ற வரிகள் படத்தில் பாடல்களுக்கான காரணத்தை நியாயப்படுத்துகிறது.
ருத்ரா என்கிற அகோரி கதாபாத்திரத்தை கதையின் முக்கிய பாத்திரமாக சித்தரிப்பதே இது பாலாவின் படம் என்பதை பறைசாற்றுகிறது. கதாநாயகன் – கதாநாயகி என்று யாரும் இல்லை. எல்லாமே இயல்பான கதாபாத்திரங்கள். “இங்கே பார்த்தியா, என்ன அநியாயம் நடக்குதுனு?”… “அங்கே பாரு, அவன் என்ன சொல்லுறானு?” என்று பாலா நம்மைக் கைப்பிடித்து காட்சி நடக்கும் இடங்களுக்கே தரதரவென இழுத்து செல்வது போல இருக்கிறது. படத்தின் உச்சக்கட்ட காட்சி ஒரு சமூக அவலத்தின் உச்சம் – Perfect Climax.
கம்பீரமான நடை, அந்த தீர்க்கமான பார்வை, அநாவசிய உணர்ச்சிவசப்படல் இல்லாமை – ருத்ராவாக வரும் ஆர்யாவின் கச்சிதமான நடிப்பு. வேறு எந்த பெரிய (தொகை) நடிகராலும் இந்த கதாபாத்திரத்தை இவ்வளவு கச்சிதமாக நம் மனதில் பதிய செய்ய வாய்ப்பில்லை.
எனக்கு பூஜா என்ற நடிகையே தெரியாது, இதற்கு முன்னால். அதனால் மிக எளிதாக அவரது அம்சவல்லி பாத்திரம் அந்த பாத்திரமாக மட்டுமே எனக்கு தெரிந்தது. இது போன்ற Image-க்கு உட்படாத நடிகர்கள் படத்திற்கு மிகப் பெரிய பலம்.
பிச்சைக்காரர்களாகவும் ஊனமுற்றவர்களாகவும் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தின் Hero-தான். யாரும் நடித்ததாகத் தெரியவில்லை. இயல்பாக இருக்கிறார்கள். இவர்களை வேலை வாங்கும் மிகப் பெரிய வேலையை பாலா திறம்படவே செய்துள்ளார். ஊனமுற்ற பிச்சைக்காரர்களும் மனிதர்கள் தான்; அவர்களின் உலகத்திலேயும் கிண்டல்கள், கேலிகள், சந்தோஷம், கல்யாணம், அன்பு, ஆதரவு, பொது அறிவு படைத்தவர்கள், குரல் வளம் படைத்த நன்றாக பாடும் திறமை படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு மாபெரும் உலகத்தையே நமக்கு நினைவுப்படுத்தியிருக்கிறார். அவர்கள் தங்கள் உலகத்தை எப்படி சந்தோஷமாகா வைத்துக் கொள்கிறார்கள் என்பதை அவர்களின் கிண்டல்கள் வழியாகத் தெரிகிறது. அந்த ஒவ்வொரு கிண்டலுக்குப் பின்னாலும் முன்னாலும் ஒரு சமூக அவலம் ஒளிந்து கிடக்கிறது.
படம் ஆங்காங்கே தணிக்கைத்துறையால் குத்திக் குதறப்பட்டிருக்கிறது தெளிவாகத் தெரிகிறது. தொப்புள் பம்பரம், பரோட்டா கடைப் பாட்டு, கையால் சொடுக்கு போட்டு படம் பார்க்கும் நமக்கு advice, செட் போட்டு ஆடும் ஆபாச நடனம் போன்ற “கலை அம்சங்கள்” இல்லாத இந்த படத்தை வேறு என்ன செய்வது? பாவம் அவர்கள்.
இந்த படம் மிக அருவருப்பாக இருப்பதாக சொல்லுகிறார்கள். இவர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை. வெறும் 2 மணி நேரம் இந்த கொடுமைகளை சத்யம் தியேட்டரில் குளுகுளு வசதியுடன், ஒரு பக்கம் Pop-Corn, இன்னொரு பக்கம் Mega size Mirinda இத்யாதிகளுடன் பார்ப்பதற்கே குமட்டலாக இருக்கிறதென்றால், அந்த சூழ்நிலையில் தினம் தினம் அணு அணுவாக செத்துக் கொண்டிருப்பவர்களின் நிலை?
இவர்களின் குமட்டல் தான் இந்த படத்தின் வெற்றி! நமது நாடு சாக்கடையாக நாறுகிறது என்று உண்மையை சொல்கிறவனுக்கு தேசத்துரோகி பட்டம் தரும் சமூகம் இது. இந்த படம் சாக்கடையை அடையாளம் காட்டியிருக்கிறது. அதை சுத்தம் செய்யப் போவது யார்? குறைந்த பட்சம் மேலும் மூத்திரம் அடிக்காமல் இருந்தாலே போதும் என்று நினைக்கத் தோன்றுகிறது. என்ன? நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
Swamy Ji,
I stopped watching movies for the last few years. By reading your review comments, i wanted to see..
Regards,
Suresh
மிக நேர்த்தியான நடுநிலையான விமர்சனம். இப்படிப்பட்ட விமர்சனங்களை வணிகரீதியில் வெளிவரும் வாரப் பத்திரிகைகளில் காண இயலாது.
அந்த இயக்குநரோ, நடிகரோ, நடிகையோ பத்திரிகைக்காரர்களுக்கு உறவினர்களாக இருந்திருக்கும் வாய்ப்பு உண்டு.
அதைவிட அந்தப் பத்திரிகையே படத்தையே எடுத்திருக்கும் வாய்ப்பும் இங்கே உண்டு. அப்படி இருக்கும்போது நடுநிலை தவறுவதற்கே சாத்தியம் அதிகம்.
உங்கள் நடுநிலையான விமர்சனம் அருமை. நன்றி.
மிக சரியான விமர்சனம் …..
எனக்கும் இந்த திரைப்படம் மிகவும் பிடித்த மற்றும் பாதித்த திரைப்படம் என்பதில் சந்தேகம் இல்லை…..ஆனால் ஒரு விஷயம் தெளிவு படுத்த விரும்புகிறேன்…..திரைப்படம் என்பது மக்கள் தங்கள் கவலைகளை மறக்கவும்….பொழுது போக்கிற்கு குழந்தைகளையும் , இளம் மனைவி யையும் அழைத்து வரும் இடம்…அங்கே அனைவரும் சேர்ந்து பார்க்குமாறு திரைப்படம் இருக்க வேண்டுமே தவிர , தனியாக இருந்து உணர்ச்சி வசப்பட்டு பார்க்குமாறு இருக்க கூடாது….மக்கள் மனதை பாதிக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர்கள் திரைபடத்தின் முடிவில் நாயகனை கொல்லுவதும், நாயகனை பைத்தியம் ஆக்குவதும் என போகிறது இன்றைய திரைப்படங்கள். நல்ல கருத்துடன் , பொழுது போக்ககாவும் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து…